கடலூர், பெரியார் கலைக் கல்லூரி, தமிழ்த்துறை கல்லூரி தொடங்கப்பட்ட நாளிலிருந்தே செயல்பட்டு வருகிறது. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் 2005 வரை பகுதி ஐ தமிழ்ப் பாடங்களை மட்டுமே கற்பித்து வந்தனர். தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் துறைப்பேராசிரியர்களின் சீரிய முயற்சியால் 2005 – 2006 ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு (சுயநிதி வகுப்பாக) தொடங்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டிலேயே இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு அரசுப் பாடமாக மாற்றப்பட்டது. 2007 – 2008 ஆம் கல்வியாண்டில் இளங்கலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு சுழற்சி - ஐஐ க்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஆய்வுப் படிப்புகளான ஆய்வியல் நிறைஞர் (எம்.பில் தமிழ்) மற்றும் முனைவர் பட்ட ஆய்வு (பி.எச்.டி) ஆகியவை 2011 – 2012 ஆம் கல்வியாண்டிலும் முதுகலைத் தமிழ்ப் பட்ட வகுப்பு 2012 – 2013 ஆம் கல்வியாண்டிலும் தொடங்கப்பட்டன.
தமிழ்த்துறையில் இளங்கலைத் தமிழ்ப் பாடப்பிரிவில் 300 மாணவர்களும் (சுழற்சி – 1 மற்றும் 2) முதுகலைத் தமிழ்ப் பாடப்பிரிவில் 60 மாணவர்களும் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில் தமிழ்) பாடப்பிரிவில் 20 மாணவர்களும் பயின்று வருகின்றனர். முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை 16 மாணவர்கள் பகுதி நேரமாகவும் 11மாணவர்கள் முழு நேரமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த்துறையில் சுழற்சி – 1 இல் 17 பேராசிரியர்களும் சுழற்சி – 2 இல் 8 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் 14 பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர். 10 பேராசிரியர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கான நெறியாளராகவும் 2 பேராசிரியர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுக்கான நெறியாளராகவும் செயல்படும் தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.
எமது தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கருத்தரங்குகள், மாநாடுகள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றில் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். அவர்களது ஆய்வுக் கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன. 2015 சனவரி 28 முதல் பிப்ரவரி 2 வரை மலேசியத் தலைநகர் கோலாம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் கே. பழனிவேலு, திரு சு. இளங்கோ, திரு. ச. விஷ;ணுதாசன் ஆகியோர் பங்கேற்று கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழாழிக் கொற்கை வேந்தன் பல்கலைக் கழக மானியக்குழு நிதியுதவி பெற்று குறுந்திட்ட ஆய்வினைச் சமர்ப்பித்துள்ளார். தமிழத்துறையைச் சேர்ந்த பேராசிரியர்களான முனைவர் கே. பழனிவேலு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதியுதவி பெற்றும் முனைவர் ந.பாஸ்கரன், திரு.சு. இளங்கோ, முனைவர் சொ. ஏழுமலை, முனைவர் த. கலையரசி, முனைவர் ஜெ.சியாமளா ஆகியோர் பல்கலைக் கழக மானியக்குழு நிதியுதவி பெற்றும் குறுந்திட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.